நமது தமிழ் நாட்டின் அடையாள மலர் என்பது செங்காந்தள் மலர் ஆகும். செங்காந்தள் மலர், ஜிம்பாவே நாட்டின் தேசிய மலரும் கூட. அது தவிர தமிழீழத்தின் மலராகவும் அறிவித்துள்ளார்கள். இந்த பூக்கள் நெருப்பை போன்று நிறம் கொண்டிருக்கும். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருக்கும். அதனால் தான் என்னவோ இந்த வகை மலர்களை உலகம் முழுவதும் வளர்க்கின்றனர்.
இதன் தாவரவியல் பெயர் குளோரியோசா சுபர்பா என்பதாகும். உலகம் முழுவதும் கொடி லில்லி, படரும் லில்லி, குளோரியோசா லில்லி, டைகர் லில்லி, மற்றும் பிளேம் லில்லி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த வகை பூக்களுக்கு பல பெயர்கள் உண்டு. இந்த பூ நெருப்பை போன்று, தீக்கொழுந்து விட்டு எறிவது போன்ற நிறம் கொண்டிருப்பதால் அக்கினிசலம் என்றும், கார்த்திகை மாதத்தில் மலருவதால், இதை கார்த்திகை பூ என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் இது செடி மற்றும் மரங்களில் பற்றி ஏறுவதால், பற்றி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. அரைவம், இரும்பு, கண்டல், கண்ணோவுப்பூ, என்கின்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
இது வெப்ப மண்டல ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இவை இயற்கையாக ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியா, இலங்கை, சீனா மலாக்கா தீபகற்பம், அயன மண்டல ஆப்பிரிக்கா, அந்தமான் தீவுகளிலும் காணப்படுகிறது. இது இயற்கையாக வனப்பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும், வேலிகளிலும் படர்ந்து நிமிர்ந்து வளர்கின்றன. இந்த மலர் கடல் மட்டத்தில் இருந்து 2500 மீட்டர் உயரமான பகுதிகளில் வளர்கின்றது.
மருத்துவ குணங்களுக்காக இதன் கிழங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதனால் இயற்கையாக காடுகளில் வளரும் இதன் கிழங்குகள் தோண்டி விற்கப்படுவதன் காரணமாக இவை அழிந்து வருகின்றது. இலங்கையில் இது அரிதான தாவரமாக மாறிவிட்டது. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதே நேரத்தில் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் செங்காந்தாளை மூலிகையாவும் பயிரிடுகின்றனர்.
செங்காந்தாள் கிழங்கு மற்றும் விதையில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதனை மாவாகவும் அரைத்தது விற்பனை செய்கின்றனர். இக்கிழங்கில் கோல்ச்சின் மற்றும் சூப்பர்பைன் என்னும் மருத்துவ கூறுகள் உள்ளன. இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இது மருந்தாக பயன்படுத்துகின்றது. ஆயுர்வேதம், யுனானி, போன்ற மருத்துவ துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றனர். இதில் ஆல்கலைடு என்னும் சுண்ணாம்பு காரம் அதிகம் இருப்பதால், பல்வேறு நாட்டு மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
தலைவலி, கழுத்துவலி, வயிற்றுவலி, வயிற்றுப்புண், சிறுநீரக பிரச்சனை, கரப்பான், தொழுநோய், தோல் அரிப்பு, புற்றுநோய், அம்மை போன்ற பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாதம், மூட்டுவலி, பேதி , பால்வினை நோய், வெண்குஷ்டம் ஆகியவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது பிரசவ வலியை தூண்டும் மருந்தாகவும், ஆற்றல் அளிக்கும் குடிப்பானாகவும் இருக்கிறது. தலையில் வரும் பேன்கள், குடற் புழுக்களை அழிக்க வல்லது.
இதன் விதைகளில் அதிகளவு கோல்ச்சின் என்னும் மருத்துவ மூலப்பொருட்கள் உள்ளது. இது மூட்டுவலி மருத்துவத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஐரோப்பிய நாடுகளில் கெளட் என்னும் மூட்டுவலி நிவாரணத்துக்கு பெரிதும் பயன்படுகிறது. யூரிக் அமிலம் மிக நுண்ணிய படிகங்களாக மூட்டுகளில் தங்குவதாலேயே மூட்டுவலி ஏற்படுகிறது. இம்மருந்தானது, மூட்டுகளில் யூரிக் அமில படிமங்கள் தங்காத வண்ணம் பாதுகாக்கிறது. இதனால் தான் இது மிக சிறந்த மூட்டுவலி நிவாரணியாக பயன்படுகிறது.
No comments:
Post a Comment