Saturday 6 August 2016

இனி எப்பொழுதும் வெப்பமே


          ஒவ்வொரு நாளும் மக்களின் சராசரி புலம்பல் "இந்த வெயில் எப்போதான் குறையுமோ தெரியல" அவர்களுக்கான பதில் இனி வரும் ஒவ்வொரு கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். இனி கோடைகாலமும் நீண்டுகொண்டுதான் போகும்.

                  உலகளவில் இதுவரை இருந்துள்ளதைக் காட்டிலும் அடுத்த இரண்டு ஆண்டுகள் மிகவும் வெப்பம் அதிகமான ஆண்டாகத்தான் இருக்கப் போகிறது என இங்கிலாந்து வானிலை ஆய்வகம் கூறியுள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடலில்  ஏற்பட்டுள்ள எல்நின்யோ விளைவு, உலகம் முழுவதும் வெப்பத்தை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிப்பதாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

  அதேநேரம், உலகின் மற்றபகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும்போது,ஐரோப்பாவில் கோடைக் காலம் வழக்கத்தை விடக் குளிர்ச்சியாக இருக்கும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. கடந்த 1961 மற்றும் 1990-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்பரப்பில் இருந்த சராசரி வெப்ப அளவைவிட இந்த ஆண்டு அது 0.68 சென்டிகிரேட் அதிகமாகி புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

               இவ்வாறு வெப்பம் தொடர்ந்து உயர்வதால் பெரிய பிரச்சினைகள் எழும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். இயற்கையின் போக்கு காரணமாக உலகளவில் வெப்ப மாறுதல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும்.மனிதர்களால் வெளியேற்றப்பட்ட, புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் காரணமாகவே இந்த ஆண்டு கூடுதலாக வெப்பம் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ஸ்டீபன் பெர்ச்சர் தெரிவித்திருக்கிறார்.

          பசிபிக் பெருங்கடல் பகுதியில் இரண்டு விதமான காலநிலை மாற்றங்கள் உருவாக்கி வருகின்றன என்றும், அவை குறிகிய, நீண்ட கால அடிப்படையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் பசிபிக் பகுதியில் ஏற்பட்டுள்ள எல்நின்யோ விளைவு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சராசரியாக மாறும் என பேராசிரியர் ஆடம் ஸ்கைபி கூறுகிறார்.

      இதன் காரணமாக கடும் வறட்சி நிலவும் பகுதிகளில் பெருமழையும், சராசரி மழை பெய்யும் பகுதியில் வறட்சியும் ஏற்படும் என்று அவர் எச்சரித்திருக்கிறார். காலநிலை, நம்மை கண்டவாறு தூக்கிப் பந்தாடப் போகிறது என்பது புரிகிறது. அதில் இருந்து கூடுமானவரை காப்பற்றிக்கொள்ளும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

No comments:

Post a Comment