Tuesday 1 May 2018

நாடு விட்டு நாடு இடம் பெயரும் சிலந்திகள்



        ஆஸ்திரேலிய நாட்டில் சமீபத்தில், வானத்தில் இருந்து சிலந்திகளும், அவற்றின் வலைகளும் மழை போல் பொழிந்த சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்

      ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்பர்ன் என்ற சிறிய நகரத்தில் தான் இந்த விந்தை நிகழ்வு நடந்துள்ளது. அன்றைய தினம் பிற்பகலில், கோல்பர்ன் நகரின் புறநகர்ப் பகுதியில் வானம் திடீரென இருண்டது.

    அப்போது சாலையில் சென்ற நபர்கள் மீது எண்ணற்ற சிலந்திக் குஞ்சுகள், அவற்றின் வலைகளுடன் மழை பொழிவது போல் விழுந்தன. வானத்தில் இருந்து திடீரென சிலந்தி மழை பொழிந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், சிலந்திகள் எப்படி மழையாகப் பொழிந்தன என்ற காரணம் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

     கோல்பர்ன் நகரைச் சேர்ந்த இயன் வாட்சன் என்பவர், "வீட்டை விட்டு வெளியே வந்த நான், எனது தலையிலும் தாடியிலும் சிலந்திகள் வலையுடன் விழுந்தபோது அதை எதேச்சையாக பார்த்தேன். ஆனால் சாலையில் சென்ற நபர்கள் மீதும் அவ்வாறு விழுந்ததை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்" என்கிறார்.

   மேலும், தான் வனத்தை அண்ணாந்து பார்த்தபோது சிலந்தி வலைகள் பறந்து வந்து கொண்டிருந்ததையும், அது பார்ப்பதற்கு பூமியிலிருந்து வானத்துக்கு சுரங்கப் பாதை அமைத்தது போல் காட்சியளித்ததாகவும் கூறினார்.

     இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், கோல்பர்ன் பகுதி மக்களுக்கு இந்த நிகழ்வு புதியதாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளன என்கின்றனர்.

    'சிலந்திகள் மழை' க்கு காரணம், அவை கூட்டம் கூட்டமாக நாடு விட்டு நாடு இடம் பெயரும் பொது, உயரமான மரங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றன. மரத்துக்கு மரம் தாவும் போது, சிலந்திகள் தங்களது வலைகளை 'பாராசூட்களாக' பயன்படுத்தி பறக்கின்றன.

        அப்போது பெரும்பாலான குட்டி சிலந்திகளின் முயற்சி தோல்வி அடைந்து அவை பூமியில் விழுகின்றன. அதுதான் மக்களுக்கு 'சிலந்தி மழை' யாக காட்சி அளிக்கின்றன. சிலந்திளின் இனம் ஒவ்வொரு நாட்டிலும் இருப்பதற்குக் காரணம், அந்த இனம்ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம் பெயர்ந்துக் கொண்டே இருப்பதுதான் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment