Friday 18 May 2018

பெட்ரோலின் வாழ்க்கை வரலாறு


    பெட்ரோல் இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரம் கொண்டது. உலகில் முதன் முதலில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் எளிதில் தீப்பற்றக் கூடிய பிடுமன் என்ற பொருள் பயன்பாட்டில் இருந்துள்ளது. இதே போன்ற பொருளை 3௦ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளியில் மெகர்காக் என்ற இடத்தில் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2௦ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில் எண்ணெய் கிணறு வெட்டப்பட்டதாக ஹெரடோட்டஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளார்.

    கி.பி. 347-ல் சீனாவில் முதல் எண்ணெய் கிணறு வெட்டப்பட்டது. 800 அடி ஆழத்தில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிகின்றன. மூங்கில் மரங்களை கொண்டு இந்த எண்ணெய் கிணறு வெட்டப்பட்டுள்ளது. கி.பி.1264-ல் மத்திய பெர்சியா நாட்டில் எண்ணெய் கிணறு வெட்டப்பட்டதாக மார்க்கோபோலோ தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார். 1500 ல் போலந்து நாட்டில் காற்பத்தியான் மலைகளில் எண்ணெய் வளம் இருக்கிறதா என்பது குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டனர். இறுதியில் மிகப் பெரிய எண்ணெய் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

    கி.பி. 1760 - 1840 ம் ஆண்டுகளில் உலகம் முற்றிலும் மாறியிருந்தது. புதிய தொழில்நுட்பங்களுக்கு தேவை அதிகரிக்கத் தொடங்கியது. தொழிற்புரட்சியின் விளைவாக புதிய புதிய எந்திரங்கள். இரும்பின் பயன்பாட்டை அதிகரித்தல் போன்றவை கண்டறியப்பட்டன. அதன் பிறகு நிலகரி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. 1846 ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஆப்ரகாம் ஜெஷ்ணர் என்பவர் நிலக்கரி, பிட்டுமனஸ், சேல் ஆயில் ஆகியவற்றில் இருந்து எண்ணெய் சுத்திகரிப்பு செய்யும்  தொழிநுட்பத்தை கண்டறிந்தார். இந்த தொழில் நுட்பம் மூலம் கண்டறியப்பட்ட எண்ணெய், மண்ணெண்ணெய் போன்று நன்கு எரியும் தன்மை கொண்டிருந்தது.

    1848 ம் ஆண்டு செம்யானவ் என்ற ரஷிய பொறியாளர் ஆப்ஷ்ஹரன் தீபகற்பத்தில் 21 மீட்டர் ஆழத்துக்கு எண்ணெய் கிணற்றை வெட்டினார். 1861 ம் ஆண்டு வரை இந்த கிணறுதான் சர்வதேச அளவில் 80 சதவீத எண்ணெய்யை உற்பத்தி செய்து வந்தது. அமெரிக்காவில் பென்சில்வேனியா நகரில் முதல் எண்ணெய் கிணறு வேட்டபட்டது. ஒரு நாளைக்கு 25 பீப்பாய் எண்ணெய் இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது. அதன்பிறகு அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

    தற்போது கச்சா எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் சவூதி அரேபியா, ரஷியா, அமெரிக்கா ஆகியவையாகும். உலகின் 80 சதவீத எண்ணெய் கிணறுகள் மத்திய கிழக்கு நாடுகளில் தான் உள்ளது. சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஈராக் ஆகிய நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி பங்களிப்பு 63 சதவீதம் ஆகும்.

No comments:

Post a Comment