Tuesday 26 February 2019

அணு மின் நிலையம் அவசியம் தானா?

   அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவையா? இல்லை பாதுகாப்பற்றவையா என்ற பட்டிமன்றம் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. ஆனால் இதற்கான இறுதி முடிவை மட்டும் இருதரப்பாலும் இன்னமும் சரியாக சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை.


    அணுமின் நிலையத்தோடு தொடர்புடையவர்கள் அது பாதுகாப்பானது என்றும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இயற்கையின் விளைவுகளை யாராலும் கணிக்கமுடியாது என்பதுதான் உண்மை. ஒரு சுனாமியோ அல்லது ஒரு பூகம்பமோ வந்தால் இவர்களால் என்ன செய்ய முடியும். என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள், எதிர்ப்பாளர்கள். இப்படி பட்டிமன்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


    ஆனால் இதற்கெல்லாம் கருத்து கணிப்பு மூலம் ஜப்பானிய மக்கள் தீர்வு சொல்லியிருக்கிறார்கள். ஜப்பான் இயற்கையால் சபிக்கப்பட்ட ஒரு தேசம். தீவுக்கூட்டமாக அமைந்திருக்கும் அந்த நாட்டுக்கு சுனாமி, பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் அழையா விருந்தாளி போல் ஓயாமல் வந்து போகும். அவர்களின் கட்டிடங்கள் கூட பூகம்பத்தை தாக்குப்பிடிக்கும் விதமாகத்தான் கட்டப்பட்டிருக்கும்.


    சுனாமியால் உலகின் மிகப்பெரிய அணுஉலை விபத்து புகுஷிமாவில் ஏற்பட்டது. நமக்கெல்லாம் அது செய்தி. ஆனால் ஜப்பானிய மக்களுக்கு அது துன்பத்தின் உச்சம். அதன் பாதிப்புகளின் கொடூரத்தை அணு அணுவாக அனுபவித்தவர்கள், விபத்து நடந்த சில மணி நேரங்களில் அணு உலையை சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மக்கள் அவர்களின் உடமைகளை விட்டுவிட்டு வெளியேறினார்கள். அவர்களின் வீட்டு உணவில் எல்லாம் கதிரியக்கம் தாக்கியிருந்தது. டோக்கியோ நகரின் குழாயிகளில் வரும் நீரை பயன்படுத்த வேண்டாம் என்று அரசு எச்சரித்தது. குழந்தைகளுக்கு உணவு தரிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பெற்றோர்கள் திண்டாடினார்கள். வார்த்தைகளால் விவரிக்க முடியாத பயங்கரங்கள் நடந்தன.


    எல்லாம் முடிந்து ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் அணு உலையை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்தது ஜப்பான். அதற்கு முன் மக்கள் கருத்தை தெரிந்து கொள்ள ஒரு கருத்துகணிப்பை நடத்தியது. அதில் 80 சதவீத மக்கள் படிப்படியாக அணுமின் நிலையங்கள் அனைத்தையும் மூடவேண்டும் என்றனர். அதேவேளையில் நாட்டின் முன்னேற்றதிற்காகவும், மின்சார தேவைக்காகவும் விபத்து ஏற்பட்டு, மூடப்பட்ட இரண்டு அணுஉலைகளையும் மீண்டும் திறந்திட வேண்டும் என்று 69 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.


    புகுஷிமா விபத்துக்கு பின் அத்தனை துயரங்களை அனுபவித்த பின்னரும், தற்போதைய சூழலில் அணுமின்சாரம் மிக அத்தியாவசியமானது என்பதுதான் பெரும்பாலான ஜப்பானிய மக்களின் கருத்தாக இருந்தது.


   ஜப்பானியர்கள் சொந்த விருப்பங்களை கடந்து தேசத்தை நேசிப்பவர்கள். அதனால்தான் பூகம்பமும், சுனாமியும் அடிக்கடி வந்துபோகும் அந்த பூமியில் துணிச்சலாக அணு உலைகளை அந்த அரசால் அமைக்க முடிந்தது. தேசத்தின் நலனுக்காக நாமும் ஜப்பானியர்களின் வழியை பின்பற்ற முயற்சி செய்வோம்.

No comments:

Post a Comment