Friday 10 January 2020

அச்சத்தால் வளர்ச்சி அடைந்த நாடுகள்


    நெருக்கடியான சூழ்நிலை வரும் போது ஒருவனின் திறமை பளிச்சென்று வெளிப்படும். அது தனி மனிதனுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும் பொருந்தும் என்பது நிருபணமாகியுள்ளது. அழியும் அபாயத்தில் இருந்த பல நாடுகள் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மற்ற நாடுகளை விட மிக வேகமாக வளர்ந்துள்ளன. அதற்கு மிக நல்ல உதாரணம் இஸ்ரேலும், தைவானும் தான்.

    ஹிட்லரின் கொடுமை, நாஜி படைகளை எதிர் கொண்டு அடி மேல் அடி வாங்கினர் யூதர்கள். போர் முடிந்து தங்களின் புனித பூமிக்கு திரும்பிய பிறகும் யூதர்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பலம் வாய்ந்த நாடுகள் இஸ்ரேலை  அழித்துவிட துடித்தன. அது தான் இஸ்ரேலுக்கு ஒருபுதிய வேகத்தை அளித்தது. இன்று மத்திய கிழக்கில் சக்தி வாய்ந்த நாடாக இஸ்ரேல் வளர்ந்து விட்டது. புதிய புதிய தொழில் நுட்பங்கள் இஸ்ரேலின் பொருளாதாரத்தை வளமாக்க உதவியிருக்கின்றன. 60ஆண்டுகளில் 6 மிகப்பெரிய போர்கள். பல சின்னச்சின்ன மோதல்கள் ஆகியவற்றை கடந்து தான் இஸ்ரேல் இந்த நிலையை பெற்றுள்ளது. இன்றும் கூட போர்களுக்கு தயார் நிலையில் தான் இஸ்ரேல் உள்ளது. 



    அதேபோன்ற நிலைதான் தைவானுக்கும். தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்தது. தைவானை மிரட்டும் நோக்கில், அந்த நாட்டின் அருகில் சீனா ஏவுகணை பரிசோதனைகளை செய்தது. பதறிப்போன தைவான் அமெரிக்காவின் உதவியை நாடியது. அதை தொடர்ந்து அமேரிக்கா தைவானை பாதுகாக்க இரண்டு கப்பல்களை அனுப்பியது. நிமிட்ஸ், இன்டிபென்டன்ஸ் என்ற பெயர் கொண்ட அந்த இரண்டு அணுகப்பல்களும் ஒட்டுமொத்த சீனாவையும் ஆவியாக்கிவிடக் கூடிய வல்லமை படைத்தவை. அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கக் கூடிய சக்தி தனக்கு இல்லாததை உணர்ந்த சீனா பின்வாங்கியது.

    அந்த சம்பவம் மூலம் தைவான் தன்னை நிலைபடுத்தி வளர தொடங்கியது. இப்போது ஐ.டி.துறையிலும், ஹார்டுவேர், செமி கண்டெக்டர்கள் உற்பத்தியிலும் தைவான் முன்னிலையில் இருக்கிறது. அத்துடன் சீனாவை எதிர்க்கக் கூடிய சிறந்த கடற்படையும் அதனிடம் உள்ளது.

   அதே போர் சீனாவையும் உசுப்பேற்றியது. அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்றால், தாங்களும் பொருளாதார ரீதியில் பலமடைய வேண்டும் என்று சீனா முடிவுசெய்தது. அதன்பின் படுவேகமாக வளர்ந்து உலகின் மிகப்பெரிய பொருளாதார ராணுவ சக்தியாக விளங்குகிறது. 

    இந்தியாவின் இன்றைய முனேற்றமும் அச்சுறுத்தல்களால் வந்தது தான் எனலாம். சீனாவின் அச்சுறுத்தலும், உலகமயமாக்கல் தொடர்பான அச்சமும் இல்லாவிட்டால் இந்தியாவும் தனது பொருளாதார கொள்கைகளில் மாற்றம் செய்திருக்காது. இந்தியாவின் உலகமய பொருளாதார கொள்கை, தற்போது சாப்ட்வேர் உள்ளிட்ட பல துறைகளில் அபரிமிதமான வளர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இங்கு ராணுவ நவீன மயமாக்கலும் நடந்துள்ளது. இப்போது எந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் அளவிற்கு இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பம் உள்ளது.

    ஐரோப்பிய நாடுகள் தற்போது பின்தங்கி இருப்பதற்கும், பொருளாதார ராணுவ சிந்தனை ரீதியில் தேங்கி இருப்பதற்கும், காரணம் அவற்றிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்பது தான். தற்போதைய அதன் தலைமுறை அரசு தரும் மானியங்களில் வளர்ந்தது. எனவே அவர்களுக்குப் புதிய பொருட்களை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து அபாயத்திலேயே வாழ்வது நல்ல விஷயம் இல்லை என்றாலும், கொஞ்சம் அபாயம் இருந்தால் தான் நாடுகள் வளர முடியும் என்பதை வளரும் நாடுகள் நிரூபித்து வருகின்றன.

No comments:

Post a Comment