Tuesday 17 March 2020

ஆறு அறிவு கொண்ட விலங்குகள்


    பொதுவாக மனித இனத்திற்கு ஒரு தற்பெருமை உண்டு.  இந்த பூமியில் சிறந்த படைப்பாக நம்மை கருதும் நாம்  மற்ற உயிரினங்களை, சாதாரண ஐந்தறிவு கொண்டதாகவும், பகுத்தறிவு அற்றதாகவும் அலட்சியம் செய்து, இந்த பூமியில் அவைகளுக்கு இருக்கும் உரிமைகளை மறுக்கிறோம். இந்த கட்டுரை மனிதர்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் இந்த பூமி மனிதர்களுக்கானது மற்றும் மனிதர்களே சிறந்த படைப்பு என்ற தற்பெருமைக்கு எதிரானது. 

    மனித இனம் மேம்பட்ட, புத்தி கூர்மையான இனம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மற்ற உயிரினங்கள் வெறும் 5 அறிவு உயிரினங்கள் என நாமாக வகுத்துக் கொண்டோம். அறிவியலின் வளர்ச்சியால் வெகு தொலைவில் உள்ள கிரகங்களை பற்றி தெரிந்து கொள்ள கூர்ந்து கவனிக்கும் நாம், பல மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் விலங்குகளை கூர்ந்து கவனிக்க பெரும்பாலும் நாம் தவறிவிட்டோம். சில விலங்குகளின் 6ஆம்  அறிவு செயல்களை இப்பொழுது காணலாம்.
யானை :
   யானைகள் நிலத்தில் வாழும் விலங்குகளில் அதிக பலம் வாய்ந்தது. ஆனால் பெரும்பாலும் அமைதியான விலங்கு. அதிகம் அறியப்படாத நடத்தைகளை கொண்டுள்ளது. யானைகள் கூட்டு குடும்ப வாழ்க்கையில் மனிதர்களைவிட சிறந்தவையாக உள்ளது. யானைகள் பிரசவிக்கும் போது அனைத்து யானைகளும் அதன் அருகிலேயே இருக்கும். ஆபத்தில் சிக்கினாலும், இறக்க நேரிட்டாலும், ஒன்றாகவே இருக்கும். இந்த யானை கூட்டத்தை எப்போதும் பெண் யானை தான் வழிநடத்தி செல்லும். இங்கு ஆண் ஆதிக்கம் கிடையாது. யானைகளால் தங்கள் உருவத்தை கண்ணாடியில் பார்த்து அடையாளம் காண முடியும். மிகச்சில விலங்குகளே இதை செய்ய இயலும்.

    யானைகள் தவறுதலாக சில சிறிய விழுங்குகளை காயப்படுத்த நேர்ந்தால், அதற்காக வருத்தப்படும். அந்த இடத்தை விட்டு உடனே விலகாது. யானைகளின் ஞாபக திறன் அதிகம். யானைகள் கருவிகளை பயன்படுத்த எளிதில் கற்றுக்கொள்கின்றன. சமீபத்தில் தமிழ்நாடு, கர்நாடக எல்லையில் ஒரு யானை மிக புத்திசாலிதனமாக மின் வேலியில் சிக்காமல், காவலர்களை ஏமாற்றி விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது செய்திகளில் இடம் பெற்றது. காடுகள் அழிக்கபடுவதால், அவைகள் ஊருக்குள் நுழைகின்றன. மனிதர்களை சமாளித்து வாழ்வதற்கு ஏற்ப அவை பரிணாம வளர்ச்சி அடைகின்றன. 
காகம் :
    பெரும்பாலும் காகங்களை பற்றி நாம் கதை சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறோம். அவைகளை உற்று கவனிப்பதில்லை. காகங்கள் மனிதர்களுடன் சேர்ந்து வாழ கற்று வைத்துள்ளன. வெளி நாடுகளில் நடந்த ஆய்வின்படி , காகங்கள் மரங்களில் கிடைத்த பாதாம் கொட்டைகளை சாலையில் போட்டு அவற்றின் மீது வாகனங்கள் ஏறி செல்ல காத்திருந்து, பிறகு சாலைகளில் சிக்கனல் விளக்குகள் மாறும் வரை காத்து இருந்து, வாகனங்கள் நின்றதும், சாலைகளில் உடைந்த பாதாம் கொட்டைகளை உண்ணுகின்றன.
டால்பின் :
    மிகவும் அற்புதமான விலங்கு. டால்பின்கள் கூட்டமாக வாழும் விலங்குகள். கருவிகளை பயன்படுத்த தெரிந்த உயிரினம். டால்பின்கள் சீட்டி அடிக்கும். தங்களுகுள்ளேயே விளையாடும். டால்பின்கள் கடலில் வழி தவறிய பயணிகளுக்கு கூட வழி காட்டிய செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அனைத்திற்கும் மேலாக இந்த டால்பின்கள் தங்களுக்கென தனி மொழியே கொண்டுள்ளன. இந்த மொழியை பற்றி அறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள்.
குரங்குகள்:
    குரங்குகள் நமக்கு பழக்கபட்ட விலங்கு என்பதால் அதை பற்றி கடைசியில் பார்க்கிறோம். குரங்குகள் மிக சாமர்த்தியமாக கருவிகளை கையாள தெரிந்தது. ஒரு குச்சியை மரத்தின் துளைக்குள் விட்டு காத்திருந்து, அந்த குச்சியை பற்றிக்கொள்ளும் பூச்சியை பிடித்து உண்ணும் பழக்கம்  உடையது. நம்மில் பலர் டிஸ்கவெரி சேனனில் ஒரு வீடியோ பார்த்து இருப்போம். அதில் ஒரு குட்டி குரங்கு, மரத்தில் இருந்து விழும் பாதாம் கொட்டைகளை வெயிலில் உலர்த்தி, பின்பு அதை ஒரு பாறை மீது வைத்து வேறு ஒரு கல்லை சுத்தியலாக பயன்படுத்தி உடைத்து உண்ணும். இது போன்ற பழக்கங்களை குரங்குகள் காடுகளில் தானாகவே கற்றுக்கொள்கின்றன. உரான்குட்டான் குரங்குகள் மனிதர்களை பார்த்து எளிதாக கற்றுக்கொள்கின்றன. வெளிநாட்டை சேர்ந்த ஒரு மிருக காட்சி சாலையில், சில விஷமிகளின் விளையாட்டால் அங்கு உள்ள உரான்குட்டான் குரங்கு ஓன்று புகை பிடிக்க கற்றுக்கொண்டு அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டது. இப்பொழுது ஊழியர்கள் அதிலிருந்து மீளச்செய்ய போராடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு விலங்குகளும் தன் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பகுத்தறிவு எனப்படும் ஆறாம் அறிவுடனே வாழுகின்றன. இதன் பிறகும் மனிதர்களை போல் விலங்குகளால் விண்வெளிக்கு செல்ல முடியுமா?, விமானம் ஓட்ட முடியுமா என்று கேட்பவர்களுக்கு, நான் சொல்ல நினைப்பது. சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரை, நாமும் காடுகளில் நாடோடிகளாக வாழ்ந்த கூட்டம் தான். எனவே, இந்த பூமியை நம் தேவைக்காக மட்டும் சுரண்டாமல், மற்ற விலங்குகளுடனும் பகிர்ந்து கொள்வோம்.

No comments:

Post a Comment