Wednesday 18 March 2020

திரும்பி வரமுடியாத பயணத்திற்கு பயிற்சி

    இருபதாம் நூற்றாண்டில் இருந்து ஏலியன்கள் என்னும் வேற்று கிரக வாசிகள் பற்றி உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம். 1977 ல், விண்வெளியில் இருந்து பெறப்பட்ட "WOW" என்ற ரேடியோ சிக்னலை தவிர வேறு எந்த ஒரு உறுதியான அறிகுறியும் தென்படவில்லை. ஆனால் இன்னும் தேடல் தொடர்கிறது. இந்நிலையில் இங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு சென்று, அங்கேயே தங்கி வாழ திட்டமிட்டுள்ளது ஒரு குழு. இந்த திட்டம் "MARS ONE" என்ற நிறுவனத்தால் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதனை செயல்படுத்த மிகவும் ஈடுபாடாக இருப்பவர் "Bas Lansdrop" என்ற டென்மார்க் நாட்டவர். இந்த திட்டத்தின் இயக்குனரான இவரிடம், இந்த பயணத்தின் காரணம் பற்றி கேட்டதற்கு "புதிய சூழலை தேடிக்கொண்டே இருக்கும் மனிதனின் ஆர்வம் தான் காரணம்". என்றார்.

    செவ்வாய் கிரகத்திற்கு சிவப்பு கிரகம் என்ற பெயரும் உண்டு. அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடினால் சிவப்பு கோலாக செவ்வாய் காட்சியளிக்கிறது. செவ்வாயின் தட்பவெப்பம் மிகவும் குளிரானது. அங்கு நிலவும் அதிகபட்ச வெப்பநிலை -20 டிகிரி செல்ஸியஸ். செவ்வாயில் காற்று மண்டலம் 95% CO2 ஆல் நிறைந்துள்ளது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவு 1%  க்கும் குறைவுதான். செவ்வாயில், சூரியனையே பல நாட்கள் மறைக்கும் அளவுக்கு வீசும் புழுதி புயல்கள் ஏராளம். செவ்வாயின் மேற்பரப்பில் ஒரு காலத்தில் நீர் இருந்திருக்க வேண்டும் என்றும், அது தற்போது உறைந்து மண்ணில் கலந்துவிட்டதாக கண்டுபிடித்து உள்ளனர். மேலும் அதன் நிலத்தடியில் நீர் இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதுகின்றனர்.

     செவ்வாய் கிரகத்திற்கு 4 பேர் கொண்ட குழுக்களாக 6 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. திரும்பி வர இயலாத இந்த பயணத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சகணக்கான மக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதிலிருந்து 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 இந்தியர்களும் அடங்குவர். 7 ஆண்டுகள் பயிற்சிக்கு பிறகு 6 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். முதல் குழு 2025 ஆம் ஆண்டு அங்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள பயண நேரம் மொத்தம் 7 மாதங்கள்.

   அங்கு செல்லும் இவர்கள் தங்களுக்கான உணவு மற்றும் ஆக்சிஜனை தாவரங்கள் மூலம் உற்பத்தி செய்ய இயலும் என திட்டமிட்டு உள்ளனர். மேலும் குடிநீரை மண்ணில் இருந்து பிரித்து பயன்படுத்தும் தொழில்நுபட்த்தை ஆராய்ந்து வருகின்றனர். இது போன்ற சில தடைகளை இவர்கள் கடந்தால் பயணம் உறுதியாகிவிடும். இதில் உள்ள பெரிய சிக்கல், உணவு, ஆக்சிஜன், நீர் போன்ற மிக அத்யாவசய தேவைகளை இவர்கள் தாங்கள் எடுத்து செல்லும் பொருட்களின் மூலம் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். அதற்கான முயற்சியில் வென்றுவிட்டால், சிகப்பு கோளில் பூமியை சேர்ந்த ஏலியன்கள் கால்பதிப்பது உறுதி. வரலாற்றை திருப்பி எழுத போகும் இந்த தருணத்தை காண இன்னும் 5 ஆண்டுகள் காத்திருந்தால் போதும்.

No comments:

Post a Comment