Friday 1 May 2020

May தின போராட்டத்தின் வரலாறு

     இந்த உலகம் இன்று வரை சுழன்று கொண்டு இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அனைத்துக்கும் மூலாதாரமாக திகழ்வது உழைப்பு தான். உலகம் தோன்றியது முதல் அனைத்து ஜீவராசிகளும் உழைத்து கொண்டே இருகின்றன. மனிதனின் உணவு சங்கிலியை போல் இன்றியமையாதது மனித இனத்தின் உழைப்பு சங்கிலி, பிழைப்பிற்கு உழைக்கும் மருத்துவம் தொடங்கி, இறப்பிற்கு உழைக்கும் இடு காடு வரை மனித இனத்தின் உழைப்பு ஒருவரை ஒருவர் சார்ந்தே அமைந்துள்ளது.

     உழைத்தவனின் வியர்வை சுவையானது, உறக்கம் இனிமையானது, உழைப்பின் பயனை அறிந்தவனும், அதன் சுவையை உணர்ந்தவனும், என்றுமே அதை கைவிட்டதில்லை. தன்னை கைவிடாதவரை உழைப்பும் கைவிட்டதில்லை.

     வீட்டில் இருக்கும் இக்காலகட்டத்தில் நமது அம்மாவின் உழைப்பை, நாம் அனைவரும் கண்கூடாக கண்டிருப்போம், சுற்றுவதில் உலகமும், உழைப்பதில் தாய்மையும் என்றுமே தன்னை நிறுத்தி கொண்டதில்லை, இவை அனைத்தையும் தாண்டி, மே முதல் தேதியை நாம் உலக அளவில் உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடுவதன் பின்னணி, தியாகமாகவும் ரத்த சரித்திரமாகவே வரலாற்றில் அரங்கேறியுள்ளது. 

    1800களின் பிற்பகுதியில் ஏற்பட்ட தொழிற் புரட்சியும் பல மடங்கு உயர்ந்திட்ட தொழிற்சாலைகளும், உளைப்பாளர்கலையே நம்பியுள்ளன. வியாபார தேவை, தொழிற் போட்டி, மற்றும் முதலாளித்துவத்தின் காரணமாக, தினமும் 15 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாளர்களிடம் வேலைவாங்கப்பட்டது. இதை எதிர்த்து 1856ம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பேர்ன் நகர தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து அதில் வெற்றியும் கண்டனர். இந்த தகவல் உலக அளவில் நேர குறைப்பிற்காக போராடிய தொழிலாளர்களுக்கு ஊக்கத்தை அளித்தது. 
     1886ம் ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சிகாகோவில் மிகப்பெரிய தொழிலாளர் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு அடிதடியும், தலைமை தாங்கியவர்களை கைது செய்து தூக்கு தண்டனையும் நிறைவேற்றபட்டது. இதனால் வெகுண்டெழுந்த 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் அவர்களின் இறுதி சடங்கில் பங்கெடுத்ததாக வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்வுக்கு பின்னரே அதன் நினைவாக உலக அளவில் மே மாதம் முதல் தேதியை உழைப்பாளர்கள் தினமாக கொண்டாட துவங்கின. 

     உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு நாள் போதாது என்பதை உணர்ந்தாலும், கிடைத்த ஒரு நாளும் வரலாற்றில் சிகப்பு மையால் எழுதப்பட்டுள்ளது. தொழிற்சாலை, மென்பொருள், கல்வி, உணவு, உடை, போக்குவரத்து, கட்டிடம், மருத்துவம், காவல், தூய்மை, அரசியல், நிர்வாகம், பாதுகாப்பு, ஊடகம் என எண்ணிலடங்கா துறைகளில் உழைக்கும் கரங்களையும், மன நிம்மதியை தவிர்த்து எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் உள்ளங்களையும், தன்னலமில்லாது ஓடி கொண்டிருக்கும் தன்னிகரில்லா உழைப்பவர்களுக்கும் இந்த நாளில் வாழ்த்துகள் தெரிவிப்பதை ஆண்டு தோறும் கடைப்பிடித்து வருகிறோம். 
     இந்த ஆண்டு, இந்த தொழிலாளர் தினம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. உயிர்கொல்லி வைரஸ் காரணமாக உண்டான ஊரடங்கில், உழைக்க வெளியில் வர வேண்டாம் வீட்டில் தனித்து இருங்கள் என கூறிக்கொண்டு தினம் தினம் வெளியில் தங்கள் குடும்பத்தினரை பிரிந்து மற்றவர்களுக்காக உழைத்து கொண்டுள்ள உளைப்பாளர்களுகான தினம் தான் இந்த வருட மே தினம். தொழிற்சாலைகள், போக்குவரத்து, வியாபாரம் என தொழில்கள் முடங்கபட்ட இந்த இக்கட்டான கட்டத்திலும், சில உழைப்பாளர்கள் ஓயாது உழைத்து கொண்டிருக்கின்றனர். 

     பிறந்தது முதல் தனது இயக்கத்தை விடாது தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கும் நமது உடல் உறுப்புகளும், தோன்றியது முதல் உலகை காக்க உழைத்து கொண்டிருக்கும் இயற்கையும், உழைப்பிற்கு ஆக சிறந்த எடுத்துகாட்டுகள். இந்த எடுத்துகாட்டுக்கு இணையாய் தங்களது உழைப்பை வழங்கி வருபவர்களே இந்த உலகம் இன்று கண்டுள்ளது. வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறையில் பலர் வேலை செய்து கொண்டிருக்க இல்லத்தில் உள்ளவர்களுக்கு களத்தில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கும் ஊடகமும், அத்தியாவசியம் இன்றி நடமாடும் மக்களை கண்காணிக்கும் காவல் துறையும், மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தடையின்றி கிடைக்க உழைத்திடும் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களும், கேடு விளையாதிருக்க அணு தினமும் தூய்மையை கருத்தில் கொண்டு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும், பொருளாதார சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்க வங்கி பணியாளர்களும், பாதிக்கப்பட்ட நோயாளிகளை தங்கள் உயிரை கொடுத்து சிகிச்சை அளிக்கும் செவிலியர்களும் மற்றும் மருத்துவர்களும், இந்த உழைப்பாளர் தினத்துக்கு மிக பொருத்தமானவர்கள்.
     ஒருவரின் உழைப்பு என்றுமே வீணாவது இல்லை. உழைப்பிற்கான பலன் உடனடியாக கிடைக்காமல் போனாலும், சிந்திய வியர்வை நமக்கு உயர்வையே அளிக்கும். சிறிது சிறிதாக சேமித்த பணம் நமக்கு பெரிய அளவிலான சேமிப்பை கொடுப்பது போல், இன்று நமது உழைப்பே எதிர்காலத்தில் பெரிய ஆதாயத்தை அளிக்கும். அப்படிப்பட்ட உழைப்பை தான் இந்த நேரத்தில் நாம் பெற்று கொண்டு இருக்கிறோம். எந்த ஒரு செயலும் நமது உழைப்பால் தான் நிறைவு பெறுகிறது. மருத்துவம், ஊடகம், காவல், தூய்மை, விவசாயம், போக்குவரத்து, வங்கிகள் என நமக்காக உழைத்து கொண்டிருக்கும் இவர்களுக்கு, இந்த மே தினத்தில் சற்றும் தயங்காமல் உரக்க சொல்வோம் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் என்று.

No comments:

Post a Comment