Monday 29 June 2015

இணையில்லா வீராங்கனை


அந்த பெண்ணின் வயது 25 தான். அதற்குள் கழுத்து நிறைய உலக சாதனை மெடல்கள். முதன் முதலில் 4.82 மீட்டர் உயரம் தாண்டிய போது உலகம் அவரை அண்ணாந்து பார்த்து. அதன் பிறகு ஒவ்வொரு சென்டி மீட்டராக உயரம் கூடி கொண்டே போனது.

சாதித்துக் கொண்டே இருக்கும் இவரது பெயர் எலேனா இசின்பயேவா. இவர் ரஷியாவைச் சேர்ந்தவர். 2௦௦4-ம் வருடம் தான் உலக அளவிலான போல்வால்ட் போட்டியில் கலந்து கொண்டார். கலந்து கொண்ட நாள் முதலே போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி விட்டார். அவரது சாதனையை அவரே தான் முறியடித்தார்.

எலேனாவின் குடும்பம் வசதியானது இல்லை. அதனால் கஷ்டபட்டு உழைத்தால் தான் எதுவும் கிடைக்கும் என்று சிறு வயதிலேயே தெளிவாகப் புரிந்து கொண்டார். ஐந்து வயதில் இருந்தே ஜிம்னாச்டிக்கை முறைப்படி ஆர்வத்தோடு கற்று வந்தார். எதிர்காலத்தில் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக வருவார் என்று அவரை சார்ந்த அனைவருமே நினைத்தனர்.

அவர் 15 வயது பருவப் பெண்ணான பொது அவருடைய உயரம் ஐந்தரை அடிதான் இருந்தது. இது ஜிம்னாஸ்டிக்கு ஏற்ற உயரம் இல்லை என்று வெளியேற்றினார்கள். இது எலேனாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. 1௦ வருடம் உடலை உருக்கி கற்று கொண்ட எல்லாம் வீணாய் போய்விட்டதே என்று புலம்பித் தவித்தார். கொஞ்சமும் அறிமுகமில்லாத, தெரியாத ஒரு விளையாட்டான போல்வாள்டிற்கு இவரை அனுப்பி வைத்தனர். ட்ரோபிமோவ் என்ற பயிற்சியாளர் கற்றுத் தந்தார். குச்சியை ஊன்றிக்கொண்டு உயரத்தில் தாண்டிக் குதிப்பது என்ன விளையாட்டு என்று எலேனாவுக்கு பிரியவே இல்லை. இந்த விளையாட்டில் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் கூறி இதன் மீது ஆர்வம் ஏற்படச் செய்தவர் ட்ரோபிமோவ் தான்.

நான்கு ஆண்டுகள் கடுமையான பயிற்சி. மனம் தளர்ந்து போகும் ஒவ்வொரு முறையும் "நீ செர்ஜிபுப்கா போல் வரப் போகிறாய்" என்று ஊக்கம் கொடுத்தார். உக்ரைன் நாட்டை சேர்ந்த போல்வால்ட் வீரரான செர்ஜிபுப்கா இந்த விளையாட்டில் நிறைய சாதித்தவர். 35 உலக சாதனைகளை செய்திருக்கிறார்.

1998-ல் எலேனா முதலாவதாக ஒரு போட்டியில் கலந்து கொண்டு நான்கு மீட்டர் உயரம் தான் தாண்டினார். அடுத்த வருடம் 4.1௦ மீட்டர் தாண்டினார். முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. பல நாடுகள் பயணம் செய்து வெற்றிகனிகளை சுவைக்கத் தொடங்கினார்.

எலேனாவுக்கு 2௦ வயது ஆனா போது பெண்களுக்கான உலக சாதனை 4.81 மீட்டராக இருந்தது. இங்கிலாந்தில் நடந்த போட்டியில் 4.82 மீட்டர் தாண்டி உலக சாதனை நிகழ்த்தினார். அது மற்றவர்களால் முறியடிக்கப்பட்டது.

மனம் தளராமல் மீண்டும் தீவிர பயிற்சியில் இறங்கினார். அடுத்த வருடமே 4.86 மீட்டர் தாண்டி மீண்டும் உலக சாதனை நிகழ்த்தினார். அப்போதிருந்தே இவரது சாதனையை இவர் மட்டுமே முறியடிக்கிறார். 5 மீட்டர் உயரம் தாண்டிய முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

நினைத்ததை சாதித்து விட்டீர்களா என்று இவரிடம் கேட்டால், இல்லை இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார், பிறகென்ன எலேனா இசின்பயேவாவுக்கு வானமே எல்லை.

No comments:

Post a Comment