Thursday 12 April 2018

யார் இந்த மடையர்கள்


   பொதுவாக தவறு செய்யும் பிள்ளைகளை மடையா என்று திட்டுவது வழக்கம். ஆனால் அந்த வார்த்தைக்கு பின் எவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது என்று தெரியுமா.

   மலை காலங்களில் ஏரிகள் நிரம்பி வழியும் போதும் மக்களுக்கு நீர் தேவைப்படும் போதும், ஏரியில் இருந்து நீரை வெளியேற்ற தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் இந்த மடை. ஆனால் இந்த மடையை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வைரம் பாய்ந்த மரங்களை தேர்வு செய்து, அதை வெட்டி பதக் படுத்தி, அதன் உள்புறத்தின் தண்டை நீக்கிவிட்டு பார்த்தால் அது ஒரு குழாய் போல் இருக்கும் அந்த மரக் குழாயை ஆழமாக பதித்து அதன் ஓட்டையில் கோரை, களிமண், நாணல் போன்றவற்றை கலந்து அடைத்து விடுவார்கள். இப்படித்தான் ஆரம்பகாலத்தில் மடைகள் உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் மிகப்பெரிய பாறைகளை கொண்டும் மரச் சட்டங்கள் கொண்டும் மடைகள் உருவாக்கப்பட்டன.

 மலை காலங்களில் மடையை திறப்பதற்காக ஆட்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். மிகப்பெரிய ஏரியின் மடையை திறப்பது சாதாரண காரியம் அல்ல. உயிரை பணயம் வைத்து நீருக்குள் மூழ்கி சென்று, செய்யும் மிகப்பெரிய சாகசம் அது. மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி கரையை உடைக்கும் முன், ஒரே ஒருவர் மட்டும் ஏரியின் அடி ஆழம் வரை சென்று தடுப்புகளை அகற்றுவார். அப்பொழுது அசுர வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடை திறந்தவரையும் இழுத்து செல்லும். புயல் வேகத்தில் புகுந்தோடும் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

   மடை திறக்க செல்வதற்கு முன் அவர்கள் தன் மனைவிகள் பிள்ளைகள் மற்றும் அனைவரிடமும் பிரியா விடை பெற்று தான் வருவார்கள். ஏனென்றால் மடை திறக்க சென்று மீண்டவர்களை விட மாண்டவர்கள் தான் அதிகம்.


   இப்படி ஊரின் நலனுக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மடையை திறக்க பணியில் ஈடுபட்டவர்கள் தான் அக்காலத்தில் மடையர்கள் என அழைக்கப்பட்டார்கள். வரலாற்று பக்கங்கள் போற்றி புகழ வேண்டிய இவர்களை தான் நாம் இன்று இழிவு படுத்திக் கொண்டிருக்கிறோம். தவறு செய்வோரையும், தவறை திருத்திக் கொள்ளாதவரையும், மடையர் என்று திட்டுவதுக்கு முன் இனி சற்று சிந்திப்போம்.

No comments:

Post a Comment