Saturday 16 June 2018

மனித உயிரியல் பூங்கா (Human Zoo)

    19 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்த ஒரு மோசமான இன வெறி கலாச்சாரம் Human Zoo என்று அழைக்கப்படும் மனித உயிரியல் பூங்காக்கள். இது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள், காலனி ஆதிக்க நாடுகளாக பல நாடுகளை தங்கள் வசம் வைத்திருந்தனர். அந்த நாடுகளில் இருந்த, ஐரோப்பாவில் இல்லாத பல விலங்குகளை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர். அனைத்து விலங்குகளையும் ஐரோப்பா மக்களின் பொழுதுபோக்கிற்காக காட்சிபடுத்தினர்.

    முதலில் விலங்குகளை மட்டுமே காட்சி பொருளாக பயன்படுத்தி வந்த இவர்கள் நாளடைவில், மனிதர்களையும் காட்சி பொருளாக பயன்படுத்தினர். 1830 ம் ஆண்டு ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த கறுப்பின மக்களை வலுக்கட்டாயமாக கொண்டு வந்து ஐரோப்பாவில் உள்ள பல நகரங்களில் காட்சி படுத்த ஆரம்பித்தனர். அப்படி கொண்டு வரப்பட்டவர்கள். பல பேர் அங்குள்ள சீதோஷண நிலை ஏற்றுக்கொள்ளாததாலும் மாறுபட்ட உணவு பழக்க முறையினாலும் மரணிக்க தொடங்கினர். மீதி உள்ளவர்களை, விலங்குகளை எப்படி காட்சி படுத்துகிறார்களோ அதே முறையில் காட்சி படுத்த தொடங்கினர்.

   அவர்களை பார்க்க வந்த மக்களும் விலங்குகளுக்கு உணவு கொடுப்பது போலவே, காட்சி படுத்தப்பட்ட மக்களுக்கும் உணவுகள் வழங்கினர். இந்த Human Zoo வில் சொல்லபடும் முக்கியமான தகவல் என்னவென்றால், மேற்கத்திய நாடுகளை சேர்ந்த வெள்ளை இனத்தினர், நாங்கள் தான் உலகின் மற்ற பகுதியில் வாழும் பல இனங்களை சேர்ந்த மக்களை விடவும் உயர்ந்தவர்கள் என்ற நிறவெறி ஆதிக்கத்தை செயல்படுத்தினர்.

     மனிதர்களின் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து வரும் கால கட்டத்தில் இந்த கீழ்த்தனமான செயல் மனித உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது என்று பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பின் காரணமாக சென்ற நூற்றாண்டுகளிலேயே இந்த Human Zoo கலாச்சாரம் ஒரு முடிவுக்கு வந்தது. இருந்தாலும் ஒரு சில இடங்களில் அவர்களிடம் முறையான அனுமதி பெற்று உண்மையான அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டனர்.

     இந்த நடைமுறை இன்னமும் மனித இனத்தை பற்றிய ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகின்றனர். உலகின் பெரும்பாலான இடங்களில் இந்த Human Zoo கலாச்சாரம்  கைவிடப்பட்டாலும், குறிப்பிட்ட சில இடங்களில் இந்த அவலம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நம் இந்தியாவை சேர்ந்த அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருக்கிற பழங்குடியினரையும் இதற்கு பயன்படுத்தபடுகின்றனர் என்பது நமக்கு வருத்தமான செய்திதான். மேற்கத்திய கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் தங்களின் மேம்பட்டவர்கள் என்று நினைத்து மற்ற கலாச்சாரத்தை சேர்ந்தவர்களால் எப்படி நடத்தப்பட்டனர் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment