Sunday 8 March 2020

மார்ச் 8ம் பெண்கள் தினமாக கொண்டாட காரணம் யார் தெரியுமா?


    ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடுகிறோம். ஆனால் பெண்களின் சுதந்திரத்திற்கு அடித்தளம் அமைத்தது யார் என்று பலருக்கும் தெரியாது.

  சர்வதேச பெண்கள் தினமாக மார்ச் 8ம் தேதி கொண்டாட காரணமாக இருந்தவர். சிங்க பெண் என பாராட்டப்பட்ட கிளாரா ஜெட்கின் என்பவர் தான். ஜெர்மனி, உலகுத்துக்கு பல நல்ல தலைவர்களை உலகிற்கு தந்துள்ளது. மாமேதை காரல்மார்க்ஸ் , ரோசாலக்சம் பேர்க். கவிஞர் கதே, நாடக மேதை பெர்டோல் பிரக்ட் இப்படிப்பட்ட மேதைகளின் வரிசையில் ஒருவர் தான் கிளாரா ஜெட்கின்.

   ஜெர்மனியின் சாக்சனி மாநிலத்தின் அருகே உள்ள கிராமத்தில் 1857 ஜூலை 5ம் தேதி கிளாரா பிறந்தார். அப்பா பெயர் எய்சனர், இவர் ஒரு ஆரம்ப பள்ளி கூட ஆசிரியர். கிளாரா தனது பதினேழாவது வயதில் லிப்ஸிக் மகளிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்தார். படிக்கும் போதே லிப்சிக் நகரில் இயங்கி வந்த புரட்சிகர சோசலிச மாணவர் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்.

   1870 முதல் ஜெர்மானிய சோஷலிச இயக்கத்தில் கிளாரா தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். 1881 - ல் சோஷலிஸ்ட்டுகளுக்கு எதிராக பிஸ்மார்க் கொண்டு வந்த தடை சட்டம் அமுலில் இருந்தபோது கிளாரா ஜெர்மனிய சமூக கட்சியில் உறுப்பினர் ஆனார்.

    ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தவர்களுடன் கிளாராவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பின் பயனாய் ஓசிப் ஜெட்கின் என்பவரை  திருமணம் செய்தார். விரும்பதகாத அந்நியர் என ஓசிப் ஜெட்கின் நாடு கடத்தபட்ட பொழுது கிளாராவும், அவரது கணவரும் அரசியல் அகதிகளாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.

    கிளாரா பிரான்ஸ், ஆஸ்திரியா, இத்தாலி போன்ற நாடுகளின் சோஷலிச இயக்கங்களில் பங்காற்றினார். பாரிசில் தங்கி இருந்த நாட்களில், மாமேதை கார்ல்மார்க்சின் மகள் லாரா பார்க்குடன் சேர்ந்து பிரான்ஸ் சோஷலிச இயக்க அமைப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டார்.

   கிளாராவின் இத்தகைய பெரும் முயற்சி உலகின் பல்வேறு நாடுகளிலும், புரட்சிகர சோஷலிசத்திற்கான போராட்டத்தில் பெண்களை அணித்திரட்ட வழிவகுத்தது. கிளாரா தனது கணவர் ஜெட்கின் மரணத்திற்கு பிறகு 1890 இல் ஜெர்மனிக்கு திரும்பினார். சமூக ஜனநாயகக் கட்சியின் மகளிர் இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். 

   கிளாரா தனது இடைவிடாத உழைப்பால் சர்வதேச மகளிர் இயக்கத்தில்  தலைமை ஈர்க்கும் தகுதியை பெற்றார். 1907 இல் சர்வதேச பெண்கள் மாநாடு, ஒரு சோஷலிச பெண்களின் அகிலமாக நடைபெற்றது. அம்மாநாட்டில் 15 நாடுகளில் இருந்து 59 பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    சர்வதேச பெண்கள் தினமாக மார்ச் 8 ஆம் தேதியை அறிவிக்க வேண்டும் என்று கிளாரா அறிக்கை தயாரித்தார். பின்னர் அதனை தீர்மானமாகவும் நிறைவேற்றியது. அதன் அடிப்படையில் அமெரிக்க சோஷலிச பெண்கள் இயக்கம், ஆர்ப்பாட்டம் நடத்திய 1908 மார்ச் 8 ஆம் நாள் ஆண்டு தோறும் சர்வதேச பெண்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

    மேலும் கிளாராவின் அர்ப்பணமிக்க பணிகள் விரிவானது. ஸ்விட்சர்லாந்தில் பேர்ன் நகரில் யுத்தத்திற்கு எதிராக சர்வதேச பெண்கள் மாநாட்டை நடத்துவதற்கு ரோசா லட்சம் பேர்களுடன் இணைந்து செயல்பட்டார். இதற்காக கிளாரா மீது கெய்சார் அரசாங்கம் தேசத் துரோக குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது. 

    சிறையில் இருந்து விடுதலை பெற்றதும் முன்பைவிட தீவிரமாக செயல்பட்டார். 1932இல் ஆகஸ்ட் மாதம் 30ஆம் நாள் பாராளுமன்றத்திற்குள் தனது முதிர்ந்த வயதிலும் உரை நிகழ்த்த ஜெர்மனிக்கு பயணமானார். 

    கிளாரா ஜெட்கின் 1933 ஜூன் மாதம் 30ஆம் தேதி மாஸ்க்கோ அருகில் மரணமடைந்தார். கிளாராவின் இறுதி ஊர்வலத்தில் ஆறு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். கிளாராவின் உடலைத் தாங்கிய பேழையை ஸ்டாலின் உள்பட பொதுவுடைமை அகிலத்தின் தலைமைக் குழு உறுப்பினர்களே சுமந்து சென்றனர். மாமேதை லெலின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே கிளாரா ஜெட்கின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. உலக பெண்களின் போற்றுதலுக்கு உரியவர் கிளாரா ஜெட்கின்.

No comments:

Post a Comment