Sunday 5 April 2020

ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த ஆயுதம் பற்றி தெரியுமா?

     வரலாற்று குறிப்புகளின்படி 6 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் மிகசிறந்த ஆயுதமாக இருந்த ஓர் ஆயுதம். மஹாபாரத போரில் கிருஷ்ணனின் சுதர்சன சக்கரம் போன்றது தமிழர்களின் இந்த ஆயுதம். 17, மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களை அதிர வைத்த ஓர் ஆயுதம். கணிதத்தையும் இயற்பியலையும் கணித்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த தொழில்நுட்பம் கொண்ட ஆயுதம். போருக்கும், வேட்டைக்கும் வேல் கம்பு, ஈட்டி, பின்பு வாளுக்கு மாறிய தமிழன், அதன் பின் எதிரியை எதிர்த்து நிற்கவும், மிரளவைக்கவும் பயன்படுத்தியது தான் இந்த வளரி.
    காற்றறை கிழித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கதையை முடிக்கும் இந்த வளரி, ஆங்கிலேயர் காலத்தில் பல தளபதிகளை ஸ்தம்பிக்க வைத்த ஓன்று. இனிஎதிர் காலத்தில் இந்த ஆயுதத்தையும் கலையையும் யாரும் கற்றுவிட கூடாது என்பதற்காகவே சட்டம் போட்டு இதை ஆங்கிலேயர்கள் தடுத்தார்கள், மீறி வீசியவர்களை கொன்று குவித்தனர்கள்.
     வளைந்த வாளை ஏறி, என்பதே வளரி என்று பொருள், ஆஸ்திரேலிய ஆதி வாசிகளால் உபயோகபடுத்தபட்ட பூமரங் வளரி போன்றே வடிவமைப்பில் இருக்கும். ஆனால் அயல் நாட்டினர் அதை விளையாட்டு பொருளாகவே பயன்படுத்தினர். ஆனால் அவர்களுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, வளரியை ஆயுதமாக பயன்படுத்தியவன் தமிழன். வளரி வீசும் போது விசை குறையகூடாது மற்றும் ஆயுதத்தின் எடை கூடினால் நீண்ட தூரம் வீச முடியாது, எடை குறைந்தால் தாகும் திறன் குறையும். அதைவிட முக்கியம் ஓர் இரும்பு துண்டு காற்றில் சுழன்று கொண்டு இலக்கு நோக்கி செல்வதற்கு அடிப்படையான எடை கட்டுபாட்டை கொண்டிருக்க வேண்டும். ஆயுதத்தின் மையத்தில் நிலை கொண்டிருக்கும் எடை அதன் சமநிலையை குவித்து விசையின் பாதையில் துல்லியமாக பயணிக்க உதவுகிறது. வளரியில் துவங்கும் தொழில்நுட்பம், நம் தமிழ் மண்ணுக்குரிய சாதனைகளில் ஓன்று.

    கள்ளர்களின் திருமணத்தில் முக்கிய அம்சமாக இருந்தது என்கிறார் ஆங்கிலேய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் க்ரோஸ். புதுகோட்டை மன்னரிடம் வளரிபடை என்ற ஒரு தனிப்படை இருந்தது என்கிறது புதுகோட்டை வரலாறு. கி.பி.1710 ல் இருந்த விஜய சேதுபதி மன்னர் தனது மகள் அகிலாண்டேஸ்வரியை மணமுடித்து கொடுக்கும்போது, சீர்களில் ஒன்றான தனது குல மரபுபடி வளரியை சீதனம் கொடுத்ததாக கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன.
    இவ்வாறு பண்டையகால திருமணத்தில் சீதனமாகவும் வளரி வழங்கப்பட்டது. போர் புரியும் வீரர்கள் தனது கொண்டையில் வளரியை சொருகி வைத்து இருப்பார்கள். போர் மூளும் போது கொண்டையில் இருந்து உருவி வளரியின் மூலம் எதிரியை போரிட்டு வீழ்த்துவார்கள். சிலர் அன்று பூஜைக்குரிய பொருளாக வளரியை வணங்கினார்கள். மேலும்வளரியை பற்றி 17, மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற குறிப்புகள் பிரிடிஸ் ஆவணத்தில் எழுதப்பட்டன. வேறெங்கும் இல்லாத ஓர் ஆயுதத்தை பற்றிய ஆச்சரியமும், கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தை வெடி செல்லும் அதிர்ச்சியும் கலந்த பதிவுகளாக அந்த எழுத்துகள் இருந்தது.

     இந்த ஆயுதம் ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் பயன்படுத்தும் பூமரங் போன்றது. உலகில் இவ்விரு மக்கள் தான் இந்த ஆயுதத்தை பயன்படுத்தினார்கள் என்று கருதிய ஐரோப்பியர்கள் பின்னர் இந்த கருத்தை மாற்றி கொண்டனர். 18ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவை பற்றி ஆய்வு செய்த சாவேல்ஸ் கென் தனது நூலில், இந்த கருவி ஆசிய பகுதிகளில் இருந்து, ஆஸ்திரேலியாவுக்கு சென்று தங்கியவர்களால் அறிமுகபடுத்தபட்டது என்கிறார். கிழக்கிந்திய கம்பெனியில் பல முக்கிய பொறுப்புகளில் வகித்த கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ், தனது ராணுவ நினைவுகளில் வளரியை பற்றி எழுதியுள்ளார். கம்பெனிக்கு சிவகங்கை சீமையோடு நல்லுறவு இருந்த காலத்தில், பெரியமருதுவிடம் தான் வளரி வீசகற்று கொண்டதையும், உலகில் வேறுங்கு எங்கும் இல்லாத இந்த கருவி திறமையுடையவர்கள் வீசினால் 100 கஜ தூரத்திருக்கு சென்று, இலக்கை துல்லியமாக தாக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். 

     ஆங்கிலேய தளபதிகள் அதிகம் பயந்த ஆயுதமாக வளரி இருந்தது அன்று. பாளையக்காரர்கள் யுத்தத்தில், குறிப்பாக கொரில்லா முறையிலான மறைந்திருந்து தாக்கும் போர் முறைக்கு ஏற்ற ஆயுதமாக வளரியே இருந்தது. சென்ற இடமெல்லாம் தலைகளை அறுத்து கொண்டே வளரிகள் கீழே இறங்கின. பாளையக்காரர்கள் யுத்தம் முடிவுக்கு வந்தவுடன், ஆங்கிலேய நிர்வாகம் 1801 ஆம் ஆண்டு, ஆயுத தடை சட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி மக்கள் யாரவது போர் ஆயுதங்கள் வைத்திருந்தால், பொது வெளியில் தூக்கிலிடபடுவார்கள் என்று அருவிக்கபட்டது. அனைத்து வகையான ஆயுதங்களும் கைப்பற்றபட்டன. பாளையக்காரர்கள், போர் வீரர்கள், குடிமக்கள் எல்லோரும், ஆயுதங்கள் தவிர்க்கப்பட்ட மனிதர்களாக ஆக்கபட்டார்கள். அப்பொழுது ஆங்கிலேயர்களால் 20,000 அதிகமான வளரிகள் கைப்பற்றபட்டன. 
     தென்தமிழகம் முழுவதும் இருந்தவளரிகளை மொத்தமாக கைப்பற்றி அளித்தனர். வளரி என்ற ஆயுதத்தின் நினைவு கூட இந்த மண்ணில் இருக்க கூடாது என்பதில் ஆங்கிலேயர்கள் உறுதியுடன் இருந்தனர். வளரி வீசிய கைகள் வெறும் கைகளாக்கபட்டன. கரங்களில் இருந்து நீங்கிய ஆயுதம் நாளடைவில் மக்களின் மனதில் இருந்தும் நீங்க தொடங்கியது. பல வரலாற்று குறிப்புகளின்படி, மறுத்து சகோதரர்களே வளரி வீசுவதில் திறமையுடன் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது. கள்ளர்தடி, வளைதடி, பாராவளை, எரிவளை, சுழற்படை, படைவட்டம் என்ற பல பெயர்களில் வளரி அன்று புழக்கத்தில் இருந்தது. இப்படி தமிழர்களின் முதன்மையான போர் கருவிகளை, கலித்தொகை, புறநானூறு, கலிங்கத்துப் பரணி, ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களிலும், பிற குறிப்புகளும் தெரியபடுத்துகின்றன. 

     இவ்வாறு மிகச்சிறப்பு மிக்க ஆயுதம் இப்போது பாதுகாப்பாகவும், கண்காட்சி பொருளாகவும், பராமரித்து வருகின்றனர். ராமநாதபுரம் ராமவிலாசத்தில், தொல் அறிவியல் துறையினரால், பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழரால் உருவான இந்த கலை அழியாமல் பாதுகாப்போம்.

No comments:

Post a Comment