எளிமையின் அடையாளம் வாழைபழம். ஏழைகள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த
விலைக்கு கிடைக்கக் கூடிய பழம் இது. நல்ல காரியம் எதுவாக இருந்தாலும்
தட்டின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஞ்சள் நிற கனியாகும். உண்பதற்கு
தித்திப்பான பழங்களை மட்டுமல்லாமல், சமையலுக்கு காயும் பூவும், இட்டு உன்ன
இலை, நல்ல செய்தியை ஊருக்கு தெரியபடுத்த முழு மரம், பித்தம் போக்கிட வேர்
என அடி முதல் நுனி வரை அனைத்து பாகங்களையும் நமது பயன்பாட்டுக்கு தருவது
தான் இந்த வாழை. ஏழைகளுக்கு பசியைஆற்றும் இந்த எளிய பழத்தை, இப்போது
பணக்காரர்கள் வேறு விதமாக கையில் எடுத்துள்ளார்கள்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ், பல இந்திய இளைஞர்களின்
முன்மாதிரியாக நம்பப்படுபவர். உலகின் மிகப்பெரிய கணினி மென்பொருள்
நிறுவனத்தின் தலைவருக்கும் வாழை பழத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது
என்று கேட்கலாம்.
இது மரபணு மாற்று பயிர்களின் காலம். "துள்ளும் தக்காளி" "துவளாத
கத்தரிக்காய்" எனக் குரலெழுப்பி மரபணு மாற்றபட்ட உணவு பயிர்கள் வந்து
கொண்டிருகின்றன. மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள், தங்கள்
காப்புரிமை விதைகளை ஏழை நாடுகளில் விற்று பெருத்து கொண்டிருக்கின்றன.
வானம் பார்த்த பூமியில் விளைந்து நமக்கும் நம் குழைந்தைகளுக்கும்
ஊட்டம்கொடுத்துக் கொண்டிருந்த புன்செய் பயிர்களை, இப்போது தேடித்தான்
பார்க்க வேண்டி இருக்கிறது. இயற்கை வழி விளைவித்த உணவு பொருட்கள்
விற்கப்படும் கடைகளை மிகக்குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே காண முடிகிறது.
விதை தானியமே எடுத்து வைக்க முடியாத விதைகளை மட்டுமே விவசாயிகளுக்குப்
பரிந்துரைகின்றன, இந்த பன்னாட்டு விதை நிறுவனங்கள். ஒரு விவசாயி தனது
அடுத்த விதைப்புக்கு அவர்களை மட்டுமே நாடி கையேந்தி நிற்க வேண்டிய நிலை
திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பில்கேட்ஸ் எடுத்துள்ள சமீபத்தியமுயற்சி நமது விவசாயிகளை
அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய பயிர் விஞ்ஞானியான ஜேம்ஸ் டேல்
என்பவருடன் இணைத்து புதிய ஆராய்ச்சி ஒன்றை வெற்றிகரமாக முடித்திருப்பதாக
அவர் அறிவித்திருக்கிறார். வாழைப்பழம் ஒரு முக்கிய உணவு மட்டும் அல்ல, அது
ஒரு மருந்தும் கூட என்பதே அதன் கண்டுபிடிப்பு. இந்த கண்டுபிடிப்பின் பயனாக
இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் குழந்தை பிறப்பு மரணங்களை தடுக்க
முடியுமாம். குழந்தை பெரும் தாய்மார்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு
காரணமாக ஏற்படும் ரத்தசோகை நோயை தவிர்க்கவும் முடியுமாம். தான்
கண்டுபிடித்த புதிய வாழையில் இதற்கான மருத்துவ குணங்களை பொதித்து வைத்து
இருப்பதாக கூறுகிறார் பில்கேட்ஸ்.
வெளிநாட்டு நிறுவனங்கள் எவ்வாறு நமது பருத்தி விவசாயத்தை திட்டமிட்டு
அழித்து வருகிறதோ, அதே திட்டத்தின் மறுவடிவம் தான் இது. நமது வளமார்ந்த
பல்லுயிர் சூழலைச் சூறையாடுவதும் உணவு உற்பத்தி நுகர்வின் மீது தங்களது
மேலாதிகத்தை நிலைநிறுத்துவதும் பல பன்னாட்டு நிறுவனங்களின் ரகசிய திட்டமாக
இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக
உள்ளது.
No comments:
Post a Comment