Monday 24 December 2018

தமிழ் ஓலை சுவடிகளை சேகரித்த ஆங்கிலேயர்

   ஆங்கிலேயர்களில் சிலர் தமிழ் மொழி மீது வைத்து இருந்த பற்று நம்மை பிரமிக்க வைக்கிறது. தமிழ் ஓலை சுவடிகளை ஊர் ஊராக சென்று, தனது சொத்தை விற்று சேகரித்த அந்த ஆங்கிலேயரின் பெயர் ப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ். தமிழகத்தின் பெரு நகரங்களில் K.K.நகர், அண்ணா நகர் போல எல்லிஸ் நகரும் இருக்கும். அதுவும் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகளுக்கு இந்த பெயரை வைத்து இருப்பார்கள். வைத்தவர் அன்றைய முதல்வர் M.G.R.


   எல்லிஸ் என்ற பெயரில் திரைப்பட இயக்குனர் ஒருவர் இருந்தார். சகுந்தலை போன்ற படங்களை இயக்கியவர் எல்லிஸ் ஆர் டங்கன் தான். அவரது பெயரில் தான் இந்த நகரங்கள் அமைந்து இருகின்றன என்பது தான் பலரின் எண்ணம். அந்த அளவுக்கு இந்த அறிஞரை யாருக்கும் தெரியாது. இங்கிலாந்தில் பிறந்த ப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் ஒரு ஆங்கிலேயர். சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக விளங்கி வந்தார். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய் துறை செயலாளராக சென்னைக்கு வந்தார். 8 ஆண்டுகள் அந்த வேலையை செய்தார். அதன் பின் சென்னை ஆட்சியராக பதவி உயர்வு பெற்று பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.


   சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்காக பல இடங்களில் கிணறுகளை தோண்டினார். அந்த கிணற்றின் அருகே தமிழில் கல்வெட்டு அமைத்தார். அதில் ”இரு குழலும் மாய்ந்த மழையும் வரு குழலும் வல்லரளும் நாட்டின் குறிப்பு” என்ற நீரின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பொரித்திருந்தார். இவரது பொறுப்பின் கீழ் இருந்த நாணய சாலையை திருவள்ளுவர் உருவம் பொறித்த இரண்டு நாணயங்களை பிரிடிஷ் ஆட்சியின் போதே வெளியிட்டார். பிரிடிஷ் மகாராணிகளின் உருவம் மட்டுமே வரும் அந்த கால கட்டத்தில் இது பெரும் புரட்சி தான். ஆட்சியராக பதவியேற்ற பின் அவர் பல இந்திய மொழிகளை கற்றார். அந்த மொழிகளில் அவருக்கு தமிழ் மொழி மிகவும் பிடித்து இருந்தது. திராவிட மொழி குடும்பம் என்ற கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் இவர் தான்.

தமிழ் மொழியை தெரிந்து கொண்டதோடு நின்று விடவில்லை. தமிழ் இலக்கியங்களை கற்று தேர்ந்தார். அவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெற்றார். திருக்குறளுக்கு விரிவான விளக்கம் எழுதினார். அதனை முழுதாக முடிக்கும் முன்னே மரணத்தை தழுவினார். அவரின் திருக்குறளின் விளக்க உரை அரை குறையாகவே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. யாரும் சொல்லாத பல விளக்கங்களை புதுமையாக கூறிய அறிஞர் என்று தமிழ் அறிஞர்கள் இவரை பாராடினர். தமிழ் மீது தணியாத தாகம் கொண்ட ப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், பண்டைய இலக்கியங்களை சேகரித்து பாதுகாக்கவும் செய்தார். குறிப்பாக வீரமாமுனிவர் எழுதிய நூல்களை சேகரிப்பதற்காக தனது சொத்துகளின் பெரும் பகுதியை விற்று செலவு செய்தார். அப்படி அவர் தேடும் போது கிடைத்த பொக்கிஷம் தான். தேம்பாவணி என்ற காவியம்.


   இவருடைய இந்த முயற்சி இல்லை என்றால் இந்த காப்பியம் நமக்கு கிடைக்காமலே போயிருக்கும். தமிழரின் சிறப்புகள் பற்றி பல ஆய்வு குறிப்புகளை எழுதி வைத்து இருந்தார். அந்த கால கட்டத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்காகவே சென்னையில் இருந்து மதுரை வந்தார். தமிழோடு தொடர்பு கொண்ட பல இடங்களை பார்த்தார். இங்கும் ஏராளமான ஓலை சுவடிகளை சேகரித்தார். அதன் பின் ராமநாதபுரம் சென்றார். அங்கிருந்த தாயுமானவர் சாமதியை கண்டு உருகினார். அப்போது அவர் சாபிட்ட உணவில் விஷம் கலந்து இருந்தது. அது எதிரிகளால் வைக்கபட்டதா என்ற விவரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுய உணர்வை இழந்தார்.


   மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வரும் முன்னே மரணம் அவரை ஏற்று கொண்டது. 1819 மார்ச் 10ல் மதுரையை பார்க்க வந்த ப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் மீண்டும் சென்னை திரும்பவே இல்லை. சென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலை சுவடிகள் கேட்பாரற்று கிடந்தன. பெரிய அறைகளில் மலை போல் குவிந்து இருந்த ஓலை சுவடிகளை ஏலம் விட ஆங்கிலேயே அரசு முடிவு செய்தது. அந்த சுவடிகளின் மகத்துவம் அறியாத தமிழர்கள் யாரும் அவற்றை விலை கேட்க முன் வரவில்லை. பல மாதங்கள் பயனற்று கிடந்த ஓலை சுவடிகளை செல் அறிக்க துவங்கின. பல ஆண்டுகள் அலைந்து திரிந்து, சொத்தை விற்று ப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் சேகரித்த பொக்கிசங்கள் எல்லாம் மதுரை ஆட்சியர் பங்களாவில் பல மாதங்கள் விறகாக எரிக்கபட்டு அளிக்கப்பட்டது.


   தமிழின் பெருமை உணர்ந்து அதற்கு தொண்டாற்றிய ப்ரான்சிஸ் ஒயிட் எல்லிஷின் கனவும் சுவடிகளோடு சுவடியாக எரிந்து போனது. அந்த மாமனிதரின் பெயரை மறக்க கூடாது என்பதற்கு தான் எல்லீஸ் நகர் என்று தமிழக அரசு பெயர் வைத்தது. ஆனால் யார் அந்த எல்லிஸ் என்று யாருக்குமே தெரியாதது தான் வேதனையின் உச்சம்.

No comments:

Post a Comment