Sunday 2 February 2020

காது கேட்காத இசை மேதை


    மேற்கத்திய இசை வரலாற்றில் தனக்கென தனி இடம் படித்துக் கொண்டவர் பீத்தோவான். இவரின் சிம்பொனி இசை இன்றைக்கும் பெருமை குறையாதவையாகவே இருக்கிறது. நிழல்கள் படத்தில் வரும்  "இது ஒரு பொன்மாலை பொழுது" பாடல் கூட பீத்தோவனின் சிம்போனியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் என்கிறார்கள்.

    பீத்தோவனின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாக பிரிகின்றனர். முதல் கட்டம் 1770 முதல் 1802 வரை. இரண்டாவது கட்டம் 1803 முதல் 1814 வரை. மூன்றாவது கட்டம் 1815 முதல் 1827 வரை. இதில் இரண்டாவது கட்டம் தொடங்கும் போது பீத்தோவனின் காதுகள் கேட்காமல் போனது. அதன் பிறகு தான் அவர் உலக புகழ் பெற்றார்.

    பீத்தோவனின் முழுபெயர் லூத்விக் வான் பீத்தோவன். இவரது தந்தை பெயர் ஜோகன்வான் பீத்தோவான், தாயார் பெயர் மரியா மேக்ட லீனா கெவிரிச், 1770-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு இசைக் கற்று கொடுத்த முதல் குரு யார் என்றால் இவருடைய தந்தை தான். பீத்தோவனின் இசை பயணத்தில் வியன்னா நகரம் முக்கிய பங்கு வகுக்கிறது. 1787-ல் வியன்னாவுக்கு பயணம் மேற்கொண்ட போது தான் பல இசை கலைஞர்களை சந்தித்தார் பீத்தோவான். ஹைடனும், மொசார்ட்டும் அதில் முக்கியமானவர்கள்.

    1787-ல் பீத்தோவனின் தாயார் மரணமடைந்தார். அடுத்த 5 ஆண்டுகளில் தந்தைமரணமடைந்தார். 1796-ல் டின்விட்டஸ் என்ற காது நோயால் பாதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து 1801-ல் முழுவதுமாக காது கேட்கும் திறனை இழந்தார். இதனால் மனமுடைந்த இவருடைய காதலி கில்லிட்டா 1803-ல் வேறு ஒருவரை மணந்துகொண்டார். அதன் பிறகு ஜோசப்பின் டெய்ம் என்ற பெண் மீது காதல் கொண்டார். அவரும் இவர் காதலை ஏற்கவில்லை. இதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளானார் பீதோவான். மன ரீதியாகவும், உடல் ரீதியாவும் பெரும் பாதிப்புக்குள்ளானார். ஆனால் அனைத்தையும் மீறி சாதித்து காட்டியது தான் இவரின் தனி சிறப்பு.

    ஒன்பது முறை சிம்பொனிக்கு இசையமைத்துள்ளார். 12 வகையான அக்கேஷனல் இசை வடித்துள்ளார். 32 பியானோ சொனாடுகளை எழுதியுள்ளார். 10 வகையான பியானோ, வயலின் இசைக்குறிப்புகளை உருவாக்கியுள்ளார். மிக குறுகிய காலத்தில் தலை சிறந்த பியானோ இசைக்கலைஞராகவும், இசை நடத்துனராகவும், இசைக் கச்சேரிகளில் கொடி கட்டி பறந்தார் பீதோவான்.

     இசையே வடிவமாய் வாழ்ந்த பீத்தோவான் 1827 மார்ச் 26-ல் காலமானார். இவரின் இசையை உலகம் இன்றும் போற்றி வருகிறது. இவர் தனது காதலிக்கு எழுதிய காதல் கடிதங்களை பல அருங்காட்சியகங்கள் பாதுகாத்து வருகிறது. இவர் காலத்தில் பிராமஸ், பாக் என்ற இரு இசை மேதைகள் இருந்தனர். இவரையும் சேர்த்து மூன்று இசையுலக பிரம்மாக்கள் என்று அழைத்தனர். 1949-ல் "எரோய்க்கா", 1962-ல் "தி மெக்னி பிசியன்ட் ரெபல்", 1994-ல் "இம்மார்ட்டல் பிலாங்கு" ஆகிய திரைபடங்கள் பீத்தோவான் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த படங்கள். 

செவிகளுக்கு இனிமைபடுத்தும் சிம்பொனி இசையை, கேட்கும் திறனற்ற ஒருவர் உருவாக்கினார் என்பது உலகின் மிகப்பெரிய அதிசயம் தான்.

No comments:

Post a Comment