Sunday 10 January 2021

தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்ட காரணம் தெரியுமா?

     இன்றைக்கு தொலைபேசி இல்லாத வீடுகளே இல்லை. சின்ன சின்னப் பிள்ளைகள் கூட, ஆளுக்கொரு செல்பேசிகளுடன் சுத்தி வருகிறார்கள். தொலைபேசியின் ட்ரிங் ட்ரிங் சத்தம் இல்லத ஒரு வாழ்க்கையை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. இந்த தகவல் தொடர்புப் புரட்சி எங்கே, எப்படி தொடங்கியது தெரியுமா? 

     தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்ஸ்சாண்டர் கிராஹாம்பெல் என்று பாட புத்தகத்தில் படித்திருப்பீர்கள். வேறு யாருக்கும் தோன்றாத தொலைபேசி என்கிற யோசனை, அல்லது கற்பனை அவருக்கு மட்டும் எப்படி தோன்றியது.

     அலெக்ஸ்சாண்டர் கிராஹாம்பெலின் தாயார் பெயர் எலிஸா அவருக்கு காது கேட்காது. மகன் அலெக்ஸ்சாண்டர் கிராஹாம்பெல் மீது எலிஸா அன்பை பொழிந்தார். ஆனால், பதிலுக்கு அலெக்ஸ்சாண்டர் என்ன சொன்னாலும் அது அம்மாவுக்கு கேட்காது.

     இதனால், அலெக்ஸ்சாண்டருக்கு ரொம்பவும் சோகம் ஆகிவிட்டது.  எல்லாபையன்களும், அப்பா, அம்மாவுடன் சிரித்து பேசுகிறார்கள், நான் மட்டும் என் அம்மாவுடன் பேச முடிவதில்லையே, ஏன்? இதற்கு என்ன செய்யலாம்.

     அவருடைய வேதனையை புரிந்து கொண்ட உறவினர்கள், அவருக்கு ஒரு சின்ன அட்டை குழாயை கொடுத்தார்கள். "இந்த குழாயை அம்மா காதில் வைத்து பேசு அலெக்ஸ், அவருக்கு எல்லாம் புரியும். என்று சொன்னார்கள்.

     அதையும் அலெக்ஸ்சாண்டர் முயற்சி செய்து பார்த்தார். ஆனால் பலன் இல்லை. அவர் எவ்வளவு தான் கத்தி பேசினாலும், அதில் ஒரு சின்ன பங்கு கூட எலிசா காதுக்கு சென்று சேரவில்லை. கடைசியில் அம்மாவுக்கும் ஏமாற்றம், அவர் முகத்தில் வேதனையை பார்த்த அலெக்ஸ்சாண்டர்க்கும் வருத்தம்.

     அந்த சிறு வயதிலேயே அலெக்ஸ்சாண்டர் பெரிய புத்தக புழு, அறிவியல் பைத்தியம். அம்மாவின் காது கேட்காத பிரச்சினையைத் தீற்பதற்கு ஏதேனும் வழி உண்டா என்று அறிவியல் புத்தகத்தில் தேட தொடங்கினார். அப்போது தான் சப்தங்களை பற்றி நிறைய படிக்க ஆரம்பித்தார்.

     சப்தங்களை பற்றி படிக்க என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?, நிறைய இருக்கிறது. முதலில், நீங்கள் எப்படி பேசுகிறீர்கள்?, சத்தம் எங்கிருந்து வருகிறது?, தொண்டையிலிருந்தா?, நாக்கிலிருந்தா? அல்லது உதடுகளில் இருந்தா? 

     உங்களுக்குள் இருக்கும் சத்தம் அங்கிருந்து வெளியேறி வருவது எப்படி?, நீங்கள் பேசுவதை எதிரில் இருக்கும் உங்கள் நண்பர் தெளிவாக கேட்கிறாரே? அது எப்படி என்று தெரியுமா? உங்களுடைய வாயிலிருந்து வெளி வருகின்ற ஒலி அலைகள், காற்றில் பரவுகின்றன. அதன் பிறகே உங்கள் நண்பருடைய காதுகளுக்கு சென்று சேர்கின்றன.

     ஒருவேளை இந்த உலகத்தில் காற்றே இல்லாவிட்டால், அப்போது யார் பேசுவதும் யாருக்கும் கேட்காது இல்லையா. இப்படி பல்வேறு விசயங்களைப் படித்து, சிந்தித்து, ஆராய்ந்தார் அலெக்ஸ்சாண்டர் கிராஹாம்பெல். அப்போது அவருக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிய ஆரம்பித்தது.

     நான் பேசுவது எல்லோருக்கும் கேட்கிறது ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் கேட்கவில்லை. காரணம் ஒலி அலைகளை ஏற்றுகொள்ளும் திறன் அவருடைய காதுகளுக்கு இல்லை. அப்படியானால், காதை பயன்படுத்தாமல், வேறு வழியில் அவருக்கு சத்தத்தை உணர செய்ய முடியுமா. கொஞ்சம் கஷ்டம் தான், ஆனால், முயற்சி செய்தால் முடியும்.

     இப்போது ஒரு சின்ன பயிற்சி செய்யலாமா, ஒரு பெரிய வெள்ளை காகிதத்தை உங்கள் வாய்க்கு சற்று முன்னாள் பிடித்துக் கொள்ளுங்கள், பிறகு சத்தமாக ஒரு பாட்டு பாடுங்கள், இப்போது என்ன ஆகிறது, நீங்கள் பாட பாட, அந்த வெள்ளை காகிதம், லேசாக அதிர்கிறது இல்லையா.

      இதன் அர்த்தம் நாம் பேசும் போது அல்லது பாடும் போது வெளியாகும் ஒலி அலைகள், முன்னே பின்னே அதிர்வுகளை உருவாக்குகிறது. இந்த அதிர்வுகளை எதிரில் இருப்பவர் கவனித்தால், நாம் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். 

     அதாவது அலெக்ஸ்சாண்டர் அம்மாவுக்கு காது கேட்காவிட்டாலும் பரவாயில்லை, அவரால், அலெக்ஸ்சாண்டர் பேசும் அதிர்வுகளை உணர முடிந்தால் போதும். இந்த விஷயம் தெரிந்ததும் அலெக்ஸ்சாண்டர் உற்சாகமாகிவிட்டார். அம்மாவின் அருகே போய் நின்று அவருடைய தலைக்கு அருகே மெதுவாக பேச தொடங்கினார். 

     ஆரம்பத்தில் அவர் என்ன செய்கிறார் என்று அம்மாவுக்கு புரியவே இல்லை. ஆனால் சிறிது நேரத்தில், அலெக்ஸ்சாண்டர் பேசும் அதிர்வுகளை அவருடைய அம்மாவால் புரிந்து கொள்ள முடிந்தது. 


 அம்மா சாப்டியா ? என்று கேட்டார் அலெக்ஸ்சாண்டர்.

     அலெக்ஸ்சாண்டரின் குரல் எலிசாவுக்கு கேட்கவில்லை, ஆனால் அதன் மூலம் ஏற்படும் அதிர்வுகள் அவருக்கு விஷயத்தை புரியவைத்ததுவிட்டன.

இப்போது தான் சாப்பிட்டேன் அலெக்ஸ்.

     அம்மா இப்படி பதில் சொன்னதும், அலெக்ஸ்சாண்டர் துள்ளி குதித்தார். அவருடைய பரிசோதனை வெற்றி, காது கேட்காத அம்மாவிடம் பேசுவதற்கு ஒரு வழியை கண்டுபிடித்துவிட்டார் அலெக்ஸ்சாண்டர்.

     இது வெறும் தொடக்கம் தான். இந்த விஷயத்தை அலெக்ஸ்சாண்டர், எலிஸா இருவரும் தொடர்ந்து பயிற்சி செய்த போது, அவர்களால் ரொம்ப சுலபமாக வெகு நேரம் பேச முடிந்தது. ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

     இப்படி சிறு வயதில் இருந்தே அம்மாவிடம் ஒலி அலைகளின் மூலம் இல்லாமல், அதிர்வுகளின் மூலம் பேசி பழகிய அலெக்ஸ்சாண்டர், அதன் பிறகு இதை பற்றி நிறைய படித்தார். ஆராய்சிகள் செய்து பார்த்து புதுப்புது விசயங்களையும்,  யுத்திகளையும் கண்டுபிடித்தார்.

     ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்த அலெக்ஸ்சாண்டர் கிராஹாம்பெல், 24 வயதில் அமெரிக்க சென்றார். அங்கே பாஸ்டன் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அலெக்ஸ்சாண்டரின் மாணவர்கள் சாதாரண குழந்தைகள் அல்ல. அவருடைய அம்மா எலிசாவை போல் காத்து கேட்காத குழந்தைகள்.

    பொதுவாக, காது கேட்கும் சக்தியை இழந்த குழந்தைகள், பேசவும் முடியாமல் கஷ்டபடுவார்கள். அப்படிபட்ட குழந்தைகளுக்கு பேசவும், கேட்கவும் பயிற்சி கொடுத்தார் அலெக்ஸ்சாண்டர். இந்த பயிற்சி, அனுபவம், உழைப்பு எல்லாமே, அலெக்ஸ்சாண்டர் கிராஹாம்பெல் ஆராய்ச்சிகளில் கை கொடுத்தது. சத்தம் பற்றிய பல்வேறு ஆராச்சிகளில் ஈடுபட்ட அலெக்ஸ்சாண்டர், அதன்மூலம் ஒலி அலைகளை ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு  கடத்தகூடிய புதுமையான கருவி ஒன்றை கண்டுபிடித்தார்.

    1876ம் ஆண்டு மார்ச் 10 ம் தேதி, அலெக்ஸ்சாண்டர் கிராஹாம்பெல் தன்னுடைய ஆராய்ச்சி சாலையில் நின்றுகொண்டிருந்தார். அடுத்த அறையில் அவருடைய உதவியாளர் வாட்சன் காத்திருந்தார். அலெக்ஸ்சாண்டர் தன்னுடைய  கண்டுபிடிப்பை பரிசோதிக்க தயாரானார். அதில் வாய் வைத்து மிஸ்டர் வாட்சன் இங்கே வாருகள் என்று சத்தமாக கூப்பிட்டார்.

     அவர் பேசிய ஒலி அலைகளை அதிர்வுகளாக மாற்றியது, அடுத்த அறைக்கும் கொண்டு சென்றது, அங்கே இருந்த வாட்சனுக்கு, அலெக்ஸ்சாண்டரின் குரல் தெளிவாக கேட்டது. அது தான் உலகின் முதல் தொலைபேசி அழைப்பு.

     அலெக்ஸ்சாண்டரின் காது கேட்காத அம்மா எலிசாவுக்கு நாமெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், அவருடன் பேசுவதற்காக அலெக்ஸ்சாண்டர் கிராஹாம்பெல் கற்றுக்கொண்ட அந்த சின்ன விசயம் தான், இன்றைக்கு உலகம் முழுவதும் பிரம்மாண்டமான தொலைபேசி வலைப் பின்னலாக  பறந்து விரிந்திருகிறது. பல இதயங்களை இணைத்து கொண்டிருகிறது.

No comments:

Post a Comment